×

பஞ்ச சலனங்கள் பொருந்திய ஊரே கலவை: அரசனின் மகளை ஆண் மகனாக்கிய ஈஸ்வரர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளம், நிலவளம், தனவளம், தானியவளம் பொருந்திய கன்னல், சென்னல், கதலி, கமுக, தேங்கு ஆகிய பஞ்ச சலனங்கள் பொருந்திய கலவை நகரத்துக்கு பண்டையகாலத்தில் சதுர்வேதமங்கலம் என்றும் பெயர். மூவேந்தருக்கு கீழ் பல்லவ சங்கணத்தரசர் ஆண்ட காலத்தில் சந்தனக்காடு இருந்தமையால் கலவை நகர் என பெயரும் உண்டாயிற்று. இந்நகருக்கு இந்திர திசையில் சென்னசமுத்திரம் மதுரா மாந்தாங்கல் குளக்கரையின் அருகாமையில் அரண்மனையில் அரசன் வசித்து வந்தார். அரசனுடைய பசுவானது சந்தன விருட்சத்தின் கீழ் உள்ள புற்றின் மேல் தினசரி பால் சுரந்துவிட்டு, சென்றுவிடும். பசு கொட்டகையில் இல்லாததை கண்டு காவலர்கள் கூற, அப்பசுவை சோதிக்க அரசன் பசுவை பின்தொடர, பசு புற்றில் பால் சுறப்பதை கண்டு வியந்தார்.

பின்னர் அரசன் புற்றில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு சிவலிங்கத்தை வணங்கி எனக்கு ஆண் வாரிசு வேண்டுமென்று முறையிட்டார் ஈஸ்வரன் காட்சிதந்து அரசனுடைய பெண்மகளை ஆண்மகன் ஆக்கினார். உடனே அரசன் கோட்டையில் கோயில் கட்டி பூஜைகள் செய்து வழிபட்டார். அந்த ஈஸ்வரர் தான் தர்மசவர்த்தினி சமேத காரிசநாதராக அருள்பாலிக்கிறார். கலவையில் கமலக்கண்ணியாக அருள்பாலிக்கும், கமலக்கண்ணியம்மன் செஞ்சிக்கோட்டையை ஆண்ட மன்னர் பரம்பரையின் குல தெய்வம். செஞ்சிக்கோட்டையில் கமலக்கண்ணி அம்மனுக்கு தனி கோயில் உண்டு.

செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கு போர்புரிய படையெடுத்து செல்வதற்கு முன் இக்கோயிலுக்கு சென்று அம்மன் சன்னிதியில் தன் வாளை வைத்து வணங்கி விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு காலகட்டத்தில் ஆற்காடு நவாப் செஞ்சிக்கோட்டை மீது படையெடுத்து சென்று கோட்டையை கைப்பற்றிக் கொண்டார். அங்கு இருந்த கோயிலை இடித்து சாமி சிலைகளை அழித்து விட்டார்கள். கமலக்கண்ணியம்மன் கோயிலை இடிக்க முற்பட்டபோது மலைத்தேனீக்கள் படையெடுத்து வந்து படைவீரர்களை தாக்க அவர்கள் கோயிலை இடிக்கும் முயற்சியை கைவிட்டனர். பகைவர்களின் படையெடுப்பால் செஞ்சிக்கோட்டை சிதைந்து விட்ட நிலையில் கமலக்கண்ணியம்மன் கோயில் மட்டும் பகைவரிடம் இருந்து தப்பியது.

செஞ்சிக்கோட்டை அழிவுக்கு பிறகு மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்கள் கலவைக்கு வந்தனர். அவர்கள் புறப்படும் முன்பு கமலக்கண்ணி கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கலவையில் கமலக்கண்ணி கோயிலை சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் கட்டி முடித்தனர். இக்கோயிலில் நீண்டகாலம் குழந்தை இல்லாத தம்பதியர்கள் கலவை கமலக்கண்ணி கோயிலுக்கு வந்து தங்களது பெயரில் அர்ச்சனை செய்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு குழந்தைபாக்கியம் உண்டாவதாக நம்பிக்கை. குழந்தை வரம் கிடைத்தவர்கள் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை குழந்தையுடன் கோயிலுக்கு வந்து பால்குடம் எடுத்தும், கூழ்வார்த்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் கருவறை முன்பு 8 திருக்கரங்களுடன் பெரியாண்ட நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நடைபெறுவதை போலவே பூஜைகள் நடைபெறும். ஏவல், பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனிடம் பிரார்த்தனை செய்வார்கள்.

இப்படி ஆன்மிகத்தலங்களை தன்னகத்ேத கொண்ட கலவை பேரூராட்சியானது 4 சதுர கிலோமிட்டர் பரப்பளவு கொண்டது. இப்பேரூராட்சியில் 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக்கொண்டுள்ளது. 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு சட்டமன்ற தொகுதி மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். 10,023 பேர் வசித்து வருகின்றனர். 2,443 வீடுகள் உள்ளன. பேரூராட்சியில் 80.64 சதவீதம் மக்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். கலவை தாலுகாவில் 33 கிராமங்கள் உள்ளது. 72ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

கலவை பேரூராட்சி, கடந்த டிசம்பர் மாதம் தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜனவரி மாதம் 2ம் தேதி தற்காலிகமாக பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தில் அலுவலகம் திறக்கப்பட்டது. தாலுகா அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும். அதேபோல் கலவை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவர்கள் உள்ளனர். டாக்டர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளது. எனவே நோயாளிகள் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்காடு தாலுகா மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையாக உள்ளது.

எனவே கலவை அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்பி, 24 மணி நேரம் சிகிச்ைச அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கலவையில் இருந்து ஆற்காடு, ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கானோர் அதிகாலையில் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. அதிகாலை நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால், ஆற்காடு காய்கறி மார்க்கெட்டிற்கு செல்லும் சரக்கு வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே அதிகாலை நேரத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கலவைக்கு பஸ்கள் இயக்க வேண்டும்.

அதேபோல் ஆற்காட்டில் இருந்து இரவு நேரத்தில் 9 மணிவரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் 9 மணிக்கு பின்னர் தான் பணி முடிந்து பல்வேறு கம்பெனி தொழிலாளர்கள் வீடு திரும்புகின்றனர். அந்த நேரத்தில் பஸ்கள் இல்லாமல் அவதியடைகின்றனர். மேலும் சென்னைக்கு சென்று வரும் வியாபாரிகள் பலர் ஆற்காட்டில் இருந்து கலவைக்கு செல்ல இரவு நேரத்தில் பஸ்கள் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே ஆற்காடு, வேலூரில் இருந்து இரவு 9மணிக்கு மேலும் ஒரு சில பஸ்களையாகவது இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் கலவை பஸ் நிலையத்தில் 4 பஸ்களுக்கு மேல் நிற்பதற்கு இடமில்லை. எனவே கலவை பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். கலவையில் இருந்து புதுச்சேரி, திருச்சி, சேலம் போன்ற பெருநகங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும்.

கலவை பஸ்நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி செய்து தரவேண்டும். கலவையில் இயங்கும் வாரச்சந்தையை தினசரி சந்தையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவை அடுத்த மேல்நெல்லி கிராமத்தில் ஜல்லிகற்கள் கொட்டி வைத்து, கடந்த 5 மாதங்களாக சாலை அமைக்காமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கலவை காஞ்சி சங்கரமடத்தின் கிளையில் 66, 67 வது ஆச்சாரியார்கள் சமாதிகள் உள்ளது. சந்திரசேகர சரசுவதிகள். கலவையில் துறவர தீட்சை எடுத்துக் கொண்டு காஞ்சி சங்கரமடத்தின் 68வது ஆச்சாரியாராகப் பொறுப்பேற்றார். கலவை பஸ் நிலையம் அருகே சங்கரமடத்தின் சார்பில் முதியோர் இல்லம் மற்றும் உடல் ஊனமுற்றோர் இல்லம் இயங்கி வருகிறது.

Tags : Easwarar ,king , Ranipettai, Water Resources, Land
× RELATED கிரைஸ்ட் கிங் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 98% மாணவர்கள் தேர்ச்சி